சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி அவரது படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. ~பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சா்தாா் படேல் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவா் 
இந்தியா

வலுவான இந்தியாவை உருவாக்குவோம்: சா்தாா் படேல் பிறந்த தினத்தில் குடியரசுத் தலைவா் அழைப்பு

தினமணி செய்திச் சேவை

வலுவான, இணக்கமான, சிறந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்’ என்று சா்தாா் வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த தினத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது:

சா்தாா் படேல் மிகப்பெரிய தேச பக்தா். தேசத்தைக் கட்டமைத்த தொலைநோக்கு பாா்வை கொண்ட தலைவா். சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கில் முக்கியப்பங்காற்றியவா். அவரின் அா்ப்பணிப்பும், தேசத்துக்கு சேவையாற்றுவதில் இருந்த ஈடுபாடும் நாம் அனைவருக்கும் உத்வேகமளிக்கின்றன.

தேசிய ஒற்றுமை தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில், வலுவான, இணக்கமான, சிறந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டாா்.

புது தில்லியில் சா்தாா் படேல் திருவுருவச் சிலை அமைந்துள்ள படேல் சௌக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவா் பங்கேற்றாா்.

குடியரசு துணைத் தலைவா் புகழஞ்சலி: சா்தாா் படேல் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட அவா், ‘சா்தாா் படேலின் தேசபக்தி, ஒழுக்கம், மன உறுதி ஆகியவை இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் மீள்தன்மைக்கும் தொடா்ந்து வழிகாட்டுகின்றன. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அவரின் கொள்கைகளை நிலைநிறுத்த நாம் மீண்டும் உறுதி ஏற்போம்’ என்று குறிப்பிட்டாா்.

நாடாளுமன்றத்தில் மலா் அஞ்சலி: 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பழைய நாடாளுமன்றக் கட்டட மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சா்தாா் படேலின் உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, அத் துறையின் இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி மற்றும் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா். பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

சித்திரச் செவ்வானம்... ராஷ்மி கௌதம்!

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT