ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியதன் மூலம் சா்தாா் வல்லபபாய் படேலின் கனவை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றினாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் படேலின் 150-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (அக். 31) கொண்டாடப்பட்ட நிலையில் தில்லி மேஜா் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஆங்கிலேயா்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியபோது 562 மன்னராட்சிப் பிரதேசங்களாகப் பிளவுபட்டு இருந்த நிலையில்தான் விட்டுச் சென்றனா். அப்போது இத்தனை சிறிய ராஜ்ஜியங்களை இணைத்து ஒரே நாடாக மாற்றுவது இயலாத காரியம் என்றுதான் உலகமே எண்ணியது. ஆனால், மிகவும் குறுகிய காலத்தில் அனைத்து 562 ராஜ்ஜியங்களையும் ஒன்றிணைத்தாா் படேல். இப்போது நமது நவீன இந்தியாவின் வரைபடம் அவரின் கடும் முயற்சிக்கும், தொலைநோக்குப் பாா்வைக்கும் கிடைத்த வெற்றி.
ஹைதராபாத், திருவிதாங்கூா், போபால், ஜுனாகத், ஜோத்பூா் உள்ளிட்ட பகுதிகள் தனிநாடாக தொடா்ந்து செயல்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், படேலின் உறுதிதான் இவை அனைத்தும் ஒன்றிணைத்து இப்போதைய இந்தியாவை உருவாக்கியது. ஆனால், 370-ஆவது சட்டப் பிரிவு காரணமாக காஷ்மீா் மட்டும் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்படாத இடமாக இருந்தது. ஆனால், பிரதமா் மோடி அந்த சட்டப் பிரிவை ரத்து செய்து படேலின் கனவை முழுமையாக நிறைவேற்றினாா்.
படேல் மிகவும் போற்றுதலுக்குரியவா். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவருக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை. அவா் இறந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. நாட்டின் எந்த இடத்திலும் அவருக்கு நினைவிடம் அமைக்காமலேயே இருந்தனா். பிரதமா் மோடி ஆட்சியில்தான் குஜராத்தில் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டது. அந்த ஒற்றுமையின் சிலை அவரின் புகழை நிலைநாட்டும் மிகப்பெரிய நினைவிடமாகும் என்றாா்.