நகர்ப்புறமயமாக்கலுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு பெரும் சவாலாக உள்ளது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டர் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் அமைச்சர்கள் கலந்துகொண்ட தென்மாநில நகர்ப்புற வளர்ச்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மைக் காலமாக மக்கள்தொகை அதிகரித்து வருவதால் நகர்ப்புறமயமாக்கல் பெரும் சவாலாக மாறியுள்ளது. நகர்ப்புறங்களில் சாலை, கழிவுநீர்க் கால்வாய், போக்குவரத்து, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தேவை, யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. விரைவில் புது தில்லியில் நகர்ப்புற கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். இக்கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், துறை செயலாளர்கள், முக்கியமான நகரங்களின் மேயர்கள் கலந்துகொள்ளலாம்.
பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்தாலும் கூட்டுறவு கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். எல்லா மாநிலங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நாம் கூட்டாக முன்னேற முடியும். நமது நாட்டை பலப்படுத்த வேண்டியது அவசியம். அதில் எந்த மாநிலமும் பின்தங்கிவிடக் கூடாது.
மெட்ரோ ரயில் போன்ற நகர்ப்புற திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு, அரசு} தனியார் கூட்டுமுயற்சி, ஜப்பான் நிதி முகமை அல்லது உலக வங்கி போன்ற பன்னாட்டு முகமைகளின் பங்களிப்பு இருக்கும்.
நகர்ப்புற சவால்கள் ஒவ்வொரு மாநகரத்துக்கும் வேறுபடும். எனவே, எல்லோருக்கும் பொருந்தும் பொதுவான தீர்வை அளிக்க முடியாது. ஒவ்வொரு நகரத்திலும் வெவ்வேறு சூழ்நிலைகள் இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தை தரைக்கு மேலும், கீழும் அமைக்கலாம்.
இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவையின் 1100 கி.மீ நீளத்துக்கு நீண்டுள்ளது. இன்னும் 900 கி.மீ நீளத்துக்கான மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
2,000 கி.மீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தால், அமெரிக்காவை நாம் விஞ்சிவிடுவோம். 5 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவாக்குவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.