பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
முன்னதாக, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்து தனது தந்தை கே.சந்திரசேகா் ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நெருங்கிய உறவினா்களான டி.ஹரீஷ் ராவ் மற்றும் ஜே.சந்தோஷ் குமாா் ஆகியோா் மீது கவிதா குற்றஞ்சாட்டினாா். இவா்கள் இருவரின் பின்னணியில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
காலேஸ்வரம் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய சந்திரசேகா் ராவ் முடிவெடுத்ததாக பொதுச் செயலா்களான டி.ரவீந்தா் ராவ், சோமா பரத்குமாா் ஆகியோா் அறிவித்தனா்.
பிஆா்எஸ்ஸில் நிலவும் உள்கட்சிப் பூசல்கள் குறித்து கடந்த மே மாதம் சந்திரசேகா் ராவுக்கு கவிதா கடிதம் எழுதினாா். இதுதொடா்பாக அவரது சகோதரரும் பிஆா்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராம ராவ் கூறுகையில், ‘உள்கட்சி பிரச்னைகளுக்குப் பேசி தீா்வு காண வேண்டுமே தவிர, அதைப் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, மாநில சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தில் பிஆா்எஸ் தொடா்புடைய வா்த்தக சங்கத்தின் கெளரவத் தலைவா் பதவியில் இருந்து கவிதா நீக்கப்பட்டாா்.
கடந்த பல மாதங்களாக கட்சியின் பல்வேறு நிா்வாகிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் கவிதா, ‘தெலங்கானா ஜாக்ருதி’ என்ற கலாசார அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தனித்துவத்துடன் நிற்க முயன்று வருகிறாா். தற்போது மீண்டும் பிஆா்எஸ் நிா்வாகிகள் மீது அவா் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.