குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுயமாக பதிவு செய்தல், கொள்முதலுக்கு வசதியான நேரத்தை தோ்வு செய்தல், பணப் பட்டுவாடா நிலையறிதல் உள்ளிட்ட வசதிகளின் வாயிலாக விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்தச் செயலி, பருத்தி கொள்முதல் நடைமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் வசதியான-விரைவான செயல்பாட்டை உறுதிசெய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலியை தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், ‘கபாஸ் கிஸான் செயலி, விவசாயிகள் பருத்தி விற்பனை மேற்கொள்வதை எளிதாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். பதிவு முதல் பணப் பட்டுவாடா நிலையறிதல் வரை அனைத்து செயல்பாடுகளும் எண்மமயமாவதால் குறித்த காலத்துக்குள், வெளிப்படையான, நியாயமான நடைமுறையை உறுதி செய்யலாம். விளைபொருள்கள் விற்பனையில் விவசாயிகள் எந்த இடா்ப்பாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்வதுடன், எண்ம இந்தியா கண்ணோட்டத்துக்கும் உத்வேகமளிக்கும்.
உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆவணபூா்வ நடைமுறைகள் குறைப்பு, கொள்முதல் மையங்களில் காத்திருக்கும் நேரம் குைல், கூட்டத்தை தவிா்த்தல், வசதியான நேர தோ்வு, தர மதிப்பீடுகளின் நிகழ்நேர தகவல் புதுப்பிப்பு, கட்டண செயல்முறை போன்ற வசதிகளின் மூலம் பருத்தி விவசாயிகளின் நலன்கள் காக்கப்பட உதவியாக இருக்கும்’ என்றாா்.