புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிகாரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, கடந்த வாரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் சார்பில் பிகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், அது பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை அவமதித்து விட்டனர். 'இந்தியத் தாயை' அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல, அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் தாயை இழிவாகப் பேசிய போது, என் இதயம் எவ்வளவு காயமடைந்ததோ, அதைவிட பிகாரில் உள்ள பெண்கள், அதைக் கேட்டு எந்த அளவுக்கு வலியை சுமந்தீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தையும் காங்கிரஸ் கட்சியையும் நான் மன்னித்துவிடுவேன், ஆனால், எனது தாயை இழிவாகப் பேசியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சி, பெண்களால்தான் கவிக்கப்பட்டது என்பதால், அக்கட்சி பெண்களை பழிவாங்குகிறது. எனது தாயை இழிவாகப் பேசியவர்களின் மனநிலையே, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்பதுதான்.
அரசியலுக்கும் எனது தாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது, ராஷ்ஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரையில், எனது தாயைப் பற்றி பேச வேண்டியதன் அவசியம் என்ன? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க... ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.