இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருமோ என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.
குருகிராமில் உள்ள பைட் டான்ஸ் நிறுவனத்தில் இரண்டு பதவிகள் காலியாக இருப்பதாக வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது குறித்து இந்திய அதிகாரிகள் மற்றும் பைட் டான்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, இந்தியாவில் தற்போதைக்கு டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவே தொடரும். விரைவில் அது பயன்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுபவர்களுக்கான முக்கிய தளமாக விளங்கும் லிங்க்டுஇன் என்ற இணையதளத்தில், திடீரென, பைட் டான்ஸ் நிறுவனம் சார்பில் இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியானதால், பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இளைஞர்களையும், சிறார்களையும் தவறான வழியில் கொண்டு செல்வதாக டிக்டாக் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்ட போது, மத்திய அரசால் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்படுவதற்கு முன்பு, இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், குருகிராமில் உள்ள டிக்டாக் அலுவலகத்துக்கு, கன்டென்ட் மாடரேட்டர், குழுத் தலைவர் பதவிகளுக்கு ஆள்கள் தேவை என்று கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி விளம்பரம் வந்துள்ளது. ஒரு சில நாள்களுக்குள் இந்த வேலைக்கு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது வரை, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையே உள்ளது. மேலும், இந்தியாவில் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வராது என்பதை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும் உறுதி செய்திருக்கிறது.
இதையும் படிக்க... என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.