வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் கனமழை வெள்ளம் தொடர்வதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக வட மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. கொட்டிதீர்த்துவரும் இந்த கனமழையால் ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் உள்ளிட்ட பல மாநிலங்கள் படுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் மாநிலம் உருகுளைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், லடாக், ஹரியாணா, கிழக்கு ராஜஸ்தான், தென்மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச், மிர்பூர், ரஜோரி, ரியாசி, ஜம்மு, ரம்பன், உதம்பூர், சம்பா, கதுவா, தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகியவை சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்கள். பஞ்சாபில், கபுர்தலா, ஜலந்தர், நவாஷஹர், ரூப்நகர், மோகா, லூதியானா, பர்னாலா மற்றும் சங்ரூர் போன்ற மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன, ஹிமாச்சலப் பிரதேச மாவட்டங்களான மண்டி, உனா, பிலாஸ்பூர், சிர்மௌர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்கள் ஆகும். ஹரியாணாவில், யமுனா நகர், அம்பாலா, குருஷேத்ரா, பஞ்ச்குலா மற்றும் எஸ்ஏஎஸ் நகர் ஆகிய இடங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது, ரியாசியில் 203 மிமீ, கத்ராவில் 193 மிமீ, படோட்டில் 157.3 மிமீ, தோடாவில் 114 மிமீ, பதர்வாவில் 96.2 மிமீ என பலத்த மழை பெய்துள்ளது. ஜம்மு நகரில் 81 மிமீ, பனிஹால் (95 மிமீ), ராம்பன் (82 மிமீ), கோகர்நாக் (68.2 மிமீ) மற்றும் பஹல்காம் (55 மிமீ) ஆகிய இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. சம்பா (48 மிமீ), கிஷ்த்வார் (50 மிமீ), ராஜோரி (57.4 மிமீ), காசிகுண்ட் (68 மிமீ) மற்றும் ஸ்ரீநகர் (32 மிமீ) போன்ற பிற நிலையங்களிலும் மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.