ஜிஎஸ்டி 
இந்தியா

ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பும் அதன் தாக்கங்களும் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு வருகிற செப். 22 முதல்தான் அமலுக்கு வருவதால் அதுவரை மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை(செப். 3) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது. உயா் ரக காா்கள், புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்ற குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டும் சிறப்பு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குளியல் பொருள்கள், நெய் மற்றும் பால் பொருள்கள், பாத்திரங்கள், குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், டயபர்கள் மற்றும் நாப்கின்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த சில உபகரணங்களுக்கு 5% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஏசி, டிவி, மானிட்டர்கள், புரொஜெக்டர்கள் ஆகியவற்றுக்கான வரி 28% லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மின்னணு பொருள்களுக்கான வரி 10% குறைக்கப்படுகிறது. ரூ. 50,000-க்கு ஒரு டிவி வாங்கும்பட்சத்தில் அதற்கு 28% வரி என்றால் ரூ. 14,000, அதுவே 18% வரி என்றால் ரூ. 9,000. புதிய வரி விகிதத்தால் ரூ. 5,000 மிச்சமாகிறது.

அதேபோல பைக்குகள், 3 சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றுக்கான வரியும் 28% லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 10 லட்சம் காரின் விலையில் 10% குறைவு என்றால் ரூ. 1 லட்சம் வரை சேமிப்பாகிறது.

இதனால் செப். 22 ஆம் தேதி வரை இந்த பொருள்களின் விற்பனை பெரிதாக இருக்காது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய வரி விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பா் 22 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப். 22 முதல் முக்கிய பொருள்களின் விலை குறையும் வாய்ப்பிருப்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் முடிவை நிறுத்திவைத்துள்ளனர்.

குறிப்பாக பைக் மற்றும் கார்கள் வாங்க நினைப்பவர்கள் செப். 22க்குப் பிறகு வாங்க முடிவெடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதமே சுதந்திர நாளன்று, தீபாவளிக்கு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜிஎஸ்டி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்போவதாக மத்திய அரசும் தொடர்ந்து அறிவித்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே மின்னணு பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுசுகி விற்பனை 8% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1,43,075 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த ஆகஸ்டில் 1,31,278 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. அதேபோல அல்டோ, எஸ் - ப்ரெஸ்ஸோ என சாதாரண ரக கார்களின் விற்பனை கடந்த மாதம் குறைந்துள்ளது.

அந்தவகையில் இந்த மாதமும் வருகிற செப். 21 வரை அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் செப். 21-க்குப் பிறகு ஏசி, டிவி, பைக்குகள்,கார்கள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அதிகரிக்கும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

The GST tax rate cut will come into effect from September 22, so sales of electronic goods and vehicles are expected to remain sluggish until then.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய நிகழ்ச்சிகள்

பண்டிகையையொட்டி 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. வெற்றி!

நண்பர்களைத் தேடி... அனன்யா!

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

SCROLL FOR NEXT