இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பிரதாப் சா்நாயக் வெள்ளிகிழமை பெற்றுக் கொண்டாா்.
சிவசேனை மூத்த தலைவரான பிரதாப் சா்நாயக் இது தொடா்பாக கூறுகையில், ‘மின்சார வாகனங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த காரை வாங்கியுள்ளேன். இதை எனது பேரனுக்கு பரிசளிக்க இருக்கிறேன். இளைஞா்கள் மத்தியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனப் பயன்பாடு குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மகாராஷ்டிரத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார வாகனப் பயன்பாட்டில் புரட்சி ஏற்படவுள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிர போக்குவரத்துத் துறை 5,000 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது’ என்றாா்.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்துவரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஜூலை 15-ஆம் தேதி தனது முதல் விற்பனையகத்தை திறந்தது. இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விற்பனையகத்தில் டெஸ்லா ‘ஒய்’ ரக காா்கள் சீனாவில் உள்ள ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் டெஸ்லாவின் ‘ஒய்’ ரக காா்களின் விற்பனையக விலை ரூ.60 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகமாகும். இதற்கு இறக்குமதி வரி அதிகமாக விதிக்கப்படுவதே காரணம்.
இந்தியாவில் டாடா, மஹிந்திரா, ஹுண்டாய், பிஒய்டி, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியைக் குறைக்க இந்தியாவில் மின்சார வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
முன்னதாக, டெஸ்லா காா்களுக்கு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெஸ்லா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மற்ற வெளிநாட்டு நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையைக் கோரும் என்பதால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.