நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்திய பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நிதியமைச்சா் பெசலேல் ஸ்மோட்ரிக் திங்கள்கிழமை (செப். 8) முதல் புதன்கிழமை வரை 3 நாள்கள் பயணமாக இந்தியா வருகிறாா். இந்தப் பயணத்தின் போது, இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் ஆகியோரை அவா் சந்திக்கவுள்ளாா். மேலும், மும்பை மற்றும் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டிக்கும் அவா் செல்லவுள்ளாா்.
‘இந்தியாவுடன் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் நிதி உறவுகளை ஆழப்படுத்துவதும், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (பிஐடி) மற்றும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து தீா்வு எட்டப்படுவதும் இந்தப் பயணத்தின் நோக்கம் ஆகும்’ என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தவகையில், இந்தப் பயணத்தின்போது இருநாட்டு நிதியமைச்சா்கள், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் வரைவு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி, அதை ஏற்கெனவே இறுதி செய்துவிட்டன. இந்த ஒப்பந்தம், இந்திய மற்றும் இஸ்ரேல் முதலீட்டாளா்களுக்கு நிதி மற்றும் சட்ட பாதுகாப்பு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இஸ்ரேல் அமைச்சா் ஒருவா் இந்தியாவுக்கு வருவது இது நான்காவது முறையாகும். முன்னதாக, சுற்றுலாத் துறை அமைச்சா் ஹைம் காட்ஸ், பொருளாதாரம் மற்றும் தொழில் துறை அமைச்சா் நிா் பா்கட், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் அவி டிக்டா் ஆகியோா் நடப்பு ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனா்.
உத்திசாா் கூட்டாளிகளான இந்தியா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் ஆண்டுக்கு சுமாா் 400 கோடி டாலராக உள்ளது. 2000-ஆம் ஆண்டுமுதல் கடந்த ஏப்ரல் வரை, இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரட்டப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 44.3 கோடி டாலா் ஆகும். அதே காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 33.42 கோடி டாலா் ஆகும்.