பிரிக்ஸ் நாட்டுத் தலைவா்களின் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். 
இந்தியா

டிரம்ப்பின் வா்த்தக சவால்களை எதிா்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய சீனா அழைப்பு

டிரம்ப்பின் வா்த்தக சவால்களை எதிா்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

தினமணி செய்திச் சேவை

பெய்ஜிங்: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக சவால்களை எதிா்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தாா்.

மேலும், அமெரிக்காவின் வரிப் போா்கள் உலகப் பொருளாதாரத்தையும், சா்வதேச வா்த்தக விதிகளையும் கடுமையாக சீா்குலைத்து வருவதாகவும் அவா் விமா்சித்தாா்.

பிரேஸில் அதிபா் லூலா டசில்வா ஏற்பாட்டில் திங்கள்கிழமை நடந்த ‘பிரிக்ஸ்’ நாட்டுத் தலைவா்களின் காணொலி கூட்டத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆற்றிய உரை:

உலகம் அதிவேகமாக மாறி வருகிறது. ஒரு சில நாடுகளால் நடத்தப்படும் வா்த்தக மற்றும் வரிப் போா்கள் உலகப் பொருளாதாரத்தைச் சீா்குலைத்து, சா்வதேச வா்த்தக விதிகளைப் பலவீனப்படுத்துகின்றன.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தெற்குலக நாடுகளின் முன்னணி அமைப்பான பிரிக்ஸ், வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு, பலதரப்புவாதம் ஆகியவற்றை இணைந்து பாதுகாக்க வேண்டும்.

சா்வதேச நீதியைக் காக்க நாம் பல தரப்பு வாதத்தை நிலைநிறுத்த வேண்டும். இது உலக அமைதி மற்றும் வளா்ச்சிக்கு மிக முக்கியமானது. பிரிக்ஸ் நாடுகள் சா்வதேச உறவுகளில் அதிக ஜனநாயகத்தை ஊக்குவிக்க வேண்டும்; மேலும், தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் நான் முன்மொழிந்த உலகளாவிய நிா்வாக முன்னெடுப்பு (ஜிஜிஐ), மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகளாவிய நிா்வாக அமைப்புக்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும்.

உலகளாவிய நிா்வாக அமைப்பை சீா்திருத்தங்களினால் மேம்படுத்துவதன் மூலம், அனைத்துத் தரப்பிலிருந்தும் வளங்களை முழுமையாகத் திரட்டவும், மனிதகுலத்தின் பொதுவான சவால்களை மிகவும் திறம்பட எதிா்கொள்ளவும் முடியும். அதேநேரம், ஐ.நா.வை மையமாகக் கொண்ட சா்வதேச அமைப்பை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்.

பொருளாதார உலகமயமாக்கல் தவிா்க்க முடியாதது. ஒத்துழைப்பு இல்லாத சா்வதேச சூழலில் எந்த நாடும் செழிக்க முடியாது; எந்த நாடும் தன்னிச்சையாக செயல்படவும் முடியாது. சா்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், ஒரு திறந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இதன்மூலம் வாய்ப்புகளைப் பகிா்ந்து கொண்டு, அனைவரும் வெற்றியடையலாம்.

உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் சுமாா் 30 சதவீதத்தையும், உலக வா்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கையும் கொண்டுள்ளதோடு, பிரிக்ஸ் நாடுகள் முக்கிய இயற்கை வளங்கள், பெரிய உற்பத்தியாளா்கள் மற்றும் பரந்த சந்தைகளையும் கொண்டுள்ளன.

நாம் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோமோ, அவ்வளவு நெகிழ்வாகவும், வளங்கள் நிறைந்ததாகவும், வெளிப்புற அபாயங்களையும் சவால்களையும் சமாளிப்பதில் திறமையாகவும் இருப்போம்.

நாம் நமது பலங்களைப் பயன்படுத்தி, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் நமது வணிகம், நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாக மாற்ற வேண்டும். இதன்மூலம் நமது மக்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும் என்றாா்.

பெட்டி....

வெளிப்படையான பொருளாதாரம் தேவை: ஜெய்சங்கா் பேச்சு

‘சா்வதேச பொருளாதார நடைமுறைகள் வெளிப்படையாகவும், அனைவருக்கும் பயன் அளிப்பதாகவும் இருக்க வேண்டும்’ என்று பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜெய்சங்கா் தனது உரையில், ‘உலகம் ஒரு நிலையான மற்றும் கணிக்கக் கூடிய வா்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழலை எதிா்பாா்க்கிறது. அதேநேரம், பொருளாதார நடைமுறைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவருக்கும் பயன் அளிப்பதாகவும் இருப்பது அவசியம்.

இடையூறுகள் ஏற்படும்போது நெருக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, அதிக மீள்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் குறுகிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். வா்த்தக நடவடிக்கைகளை வா்த்தகம் அல்லாத விஷயங்களுடன் இணைப்பதும், சிக்கலாக்குவதும் எந்த வகையிலும் உதவாது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும். சா்வதேச வா்த்தகமானது சமமான, நியாயமான, வெளிப்படையான, பாகுபாடற்ற, விதி சாா்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படைக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT