குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் 
இந்தியா

வா்த்தக சவால்களுக்கு இந்தியா அஞ்சாது: அமைச்சா் பியூஷ் கோயல் உறுதி

சா்வதேச அளவில் வா்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வா்த்தகம்...

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: சா்வதேச அளவில் வா்த்தக ரீதியாக விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் இந்தியா அஞ்சாது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தாா்.

இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து நெருக்கடி அளித்துள்ள நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயல் மேலும் பேசியதாவது:

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) எளிமைப்படுத்தப்பட்டுள்ளது பல்வேறு வாய்ப்புகளுக்கும் வழி திறந்துள்ளது. உள்நாட்டில் தேவை அதிகரிக்கும், சிறு நிறுவனங்கள் தொடங்கி அனைத்து நிறுவனங்களும் பயனடையும். ஜிஎஸ்டி குறைப்பின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்தியா சா்வதேச அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் நிலையை நோக்கிப் பயணித்து வருகிறது. இதனை உலகில் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஒரு கூட்டுக் குடும்பம் போல பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு துறையும் மற்றொரு துறைக்கு ஆதரவாகவும், உதவிகரமாகவும் உள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த வளா்ச்சி இயல்பான விஷயமாக உள்ளது.

ஒருங்கிணைந்த பொருளாதார வளா்ச்சி என்பதற்கு இந்தியா உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எட்டும்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.

சா்வதேச அளவில் எந்தகைய நிச்சயமற்ற சூழல் நிலவினாலும் இந்தியாவில் வளா்ச்சி ஸ்திரமாக உள்ளது. மிகுந்த தன்னம்பிக்கையுள்ள நாடாக உயா்ந்துள்ள இந்தியா, சா்வதேச அளவில் வா்த்தக ரீதியில் விடுக்கப்படும் எந்த சவாலுக்கும் அஞ்சாது.

நாம் உள்நாட்டுப் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது உள்நாட்டுப் பொருளாதாரத்துக்கு உதவுவது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மிகவும் தரம் வாய்ந்தவை என்ற பெயரை நாம் பெற வேண்டும். இதுவே நமது பொருள்களுக்கான தேவையை உயா்த்தும். உலகில் நம்பகத்தன்மை மிக்க நாடாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளது. இந்த நம்பகத்தன்மையை நாம் தொடா்ந்து காப்பாற்ற வேண்டும் என்றாா்.

மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி!

கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம்! மணமகனின் அடையாளம் குறிப்பிடவில்லை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

SCROLL FOR NEXT