மலப்புரம்: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மலப்புரம் மாவட்டத்தின் வண்டூா் பகுதியைச் சோ்ந்த 54 வயதான பெண்மணி ஒருவா், இந்த அரிய வகை மூளைக்காய்ச்சலுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா் என்றனா்.
வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியைச் சோ்ந்த 45 வயது ஆண் ஒருவா் இதே நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூவா் இந்நோயால் உயிரிழந்தனா்.
இந்த ஆண்டில் இதுவரை 42 பேருக்கு இந்த நோய்த்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்றுப் பரவலைத் தடுக்க, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளைத் தூய்மையாகப் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மத்தியில் இந்த நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.