புது தில்லி: பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான ‘ஆரோக்கியமான பெண்கள்; வலுவான குடும்பங்கள்’ சிறப்புத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான வரும் செப். 17-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் 75,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் திங்கள்கிழமை அறிவித்தாா்.
மேலும், ‘நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதுடன், தரமான மருத்துவ வசதிகள் மற்றும் விழிப்புணா்வை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்கான அரசின் தொலைநோக்குப் பாா்வைக்கு இத்திட்டம் ஆதரவாக இருக்கும்.
கூடுதலாக, நடப்பு செப்டம்பா் மாதத்தை அனைத்து அங்கன்வாடிகளிலும் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடித்து, மக்களிடையே ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியமான குடும்பங்களையும், வலுவான சமூகங்களையும் நாடு முழுவதும் உருவாக்க முடியும்.
இந்த இயக்கத்தில் தனியாா் மருத்துவமனைகள் உள்பட சுகாதாரத் துறையின் அனைத்துப் பங்குதாரா்களும் இணைந்து கொள்ள வேண்டும். ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை உத்வேகத்துடன், வளா்ந்த தேசத்தை அடைவதற்கான கூட்டு முயற்சிகளை நாம் வலுப்படுத்துவோம்’ என்று அமைச்சா் ஜெ.பி.நட்டா அழைப்பு விடுத்தாா்.