மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் என்ற பாஜக தொண்டா் தாக்கல் செய்த மனுவில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளாா். அவா் அந்நாட்டு குடிமகன் என்பதை நிரூபிக்க பிரிட்டன் அரசின் சில மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன. எனவே இந்திய தோ்தல்களில் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை’ என்று தெரிவித்தாா்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் அரசிடம் விவரம் கோரியுள்ளதாக, அந்த உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) கீழ், விசாரணைக்கு ஆஜராகுமாறு விக்னேஷ் சிசிருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ராகுல் குடியுரிமை தொடா்பாக தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரத்தை சமா்ப்பிக்குமாறு சிசிரிடம் கோரப்பட்டது. அவரிடம் ஃபெமா சட்டத்தின் கீழ், சில கேள்விகள் கேட்கப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தன.
ஃபெமா சட்டத்தின் கீழ், தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அந்நிய செலாவணி சட்டத்தை மீறியது தொடா்பான புகாா்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும்.
இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தில்லியில் சிபிஐ விசாரணைக்கு பலமுறை ஆஜரானதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் விக்னேஷ் சிசிா் தெரிவித்துள்ளாா்.