தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 9) அறிவித்துள்ளார்.
ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் கலந்துரையாடினார். மேலும், பாதிப்பு நிலவரம் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், பெரிதும் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
முதலில் ஹிமாசலப் பிரதேசத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். பின்னர் ஹிமாசலின் காங்ரா பகுதியில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹிமாசலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் பல்வேறு வழிகளில் மதிப்பிடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக பி.எம். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒதுக்க வேண்டிய நிதி, நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு, கல்வி நிலையங்கள் சீரமைப்பு, பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அத்தியாவசிய பொருள்களுக்கான நிவாரணம் போன்றவை இதில் மதிப்பிடப்பட்டன.
வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கி மற்றும் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதல் உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார். பேரிடர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்டார். இத்தகைய இக்கட்டான சூழலில் மாநில அரசுடன் உறுதுணையாக மத்திய அரசு நிற்கும் எனத் தெரிவித்தார்.
வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார். பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில் மாநிலத்திற்கு ரூ. 1500 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட்டு மக்களுக்கு உதவிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிக்க | ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.