குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக பஞ்சாபைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள் அறிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான வாக்குப் பதிவு இன்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.
இந்த தேர்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் நேற்றே அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோமணி அகாலி தளத்தின் ஒரு எம்பி மற்றும் சுயேச்சை எம்பிக்களான சரப்ஜீத் சிங் கல்சா மற்றும் அம்ரித்பால் சிங் ஆகிய மூவரும் தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் மட்டுமே மக்களவை உறுப்பினராக உள்ளார். மாநிலங்களவையில் அக்கட்சிக்கும் எம்பி இல்லை.
இந்த நிலையில், பஞ்சாப் வெள்ளத்தை மத்திய அரசு சரியாக கையாளததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த தேர்தலை சிரோமணி அகாலி தளம் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இரண்டு சுயேச்சை எம்பிக்களும் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தண்டனை காலத்துக்கு பிறகு சீக்கிய இளைஞர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்காமல் தாமதப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.