மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.
இவ்வாறு நீதித்துறை உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு அனுப்பினார். இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்ஹா, அதுல் எஸ். சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமர்வு அனுப்பிய நோட்டீஸின்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை அவற்றின் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
அவை தொடர்பான விவாதம் ஒன்பதாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது, தொடர்ந்து இந்த வழக்கு இன்றைய(செப். 11) நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆக. 19 முதல் விசாரிக்கத் தொடங்கி, 10 நாள்களாக நடைபெற்று, இன்றுடன் விசாரணை நிறைவடைந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ. 23 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற கடைசி நாள் விசாரணையின் போது நீதிபதி கவாய் அதனைக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் பி.ஆர்.கவாய் ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.