புது தில்லி: கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் இணை நிறுவனருமான ஜகதீப் எஸ் சோக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
இவர் அண்மையில் கீழே விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நுரையீரலில் தொற்று பாதிப்பும் ஏற்பட்டதாகவும், அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாகவும் குடும்பத்தினர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நாட்டில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஎம் - அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு இயக்குநராக இருந்தவருமான ஜகதீப் சோக்கர், தன்னுடைய கடந்த 25 ஆண்டு காலத்தை, நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்.
இந்திய அரசியல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த ஜகதீப் சோக்கர், தன்னுடைய போராட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தலைமை தாங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்னணி மனுதாரர்களில் ஜகதீப் சோக்கரும் ஒருவர்.
இந்திய ரயில்வேயில், மெக்கானிக்கல் பொறியாளராக தனது வாழ்வைத் தொடங்கினார் ஜகதீப் சோக்கர். பிறகு படிப்படியாக உயர்ந்து இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் - அகமதாபாத் பேராசிரியராகவும், பிறகு டீன், பொறுப்பு இயக்குநர் பதவிகளை அடைந்தார்.
பணி ஓய்வுக்குப் பிறகு, இவர் முழுக்க முழுக்க தேர்தல் சீர்திருத்தத்துக்காகவே பாடுபட்டார்.
இதையும் படிக்க... சார்லி கிர்க் கொலையாளி தப்பியது எப்படி? புதிய விடியோ வெளியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.