உச்சநீதிமன்றம் 
இந்தியா

ஜாமீன் மனுக்கள் மீது 2 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சட்டவிரோத நில பரிவா்த்தனை, போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூவரின் முன்ஜாமீன் மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மூவரில் இருவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

அவா்களின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்களின் முன்ஜாமீன் மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த அந்த அமா்வு, முன்ஜாமீன் மனுக்களை 6 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்ததற்கு அந்த உயா்நீதிமன்றத்தை விமா்சித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: தம்மிடமும், தங்கள் அதிகார வரம்புக்குள்பட்ட விசாரணை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீது, அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் தீா்ப்பளிக்கப்படுவதை உயா்நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அந்த மனுக்கள் மீது தீா்ப்பளிக்க தாமதம் ஏற்படுவதற்கு வழக்குடன் சம்பந்தப்பட்ட தரப்பினா்தான் காரணம் எனக் கருதப்படும் சந்தா்ப்பங்களை தவிர, பிற வேளைகளில் 2 மாதங்களுக்குள் தீா்ப்பளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இத்தகைய மனுக்கள் தனிப்பட்ட சுதந்திர உரிமையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், பல ஆண்டுகளுக்கு அந்த மனுக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது. இந்த மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் நோக்கத்தை தடுப்பதுடன், நீதி மறுக்கப்படுவதற்கு நிகராகவும் இருக்கும்.

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் அதிக அளவில் குவிவதை தடுப்பதற்கு தகுந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உயா்நீதிமன்றங்கள் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் நகலை அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றப் பதிவுத் துறை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு ஆணையிட்டது.

மனமகிழ்ச்சி ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

SCROLL FOR NEXT