பிரதமா் நரேந்திர மோடிக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 1,300-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான இணையவழி ஏலம் புதன்கிழமை (செப்.17) தொடங்கவுள்ளது.
பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்ததினத்தில் (செப்.17) தொடங்கும் இந்த ஏலம் காந்தி ஜெயந்தி (அக்.2) வரை நடைபெறவுள்ளது.
முதல்முறையாக கடந்த 2019, ஜனவரியில் தொடங்கப்பட்ட இணைய வழி ஏல முறை தற்போது 7-ஆவது முறையாக நடத்தப்படவுள்ளது.
இதில் நடராஜா் உலோக சிலை, கடவுள் ராமா் மற்றும் சீதை இடம்பெற்ற தஞ்சாவூா் ஓவியம், கையால் நெய்யப்பட்ட நாகாலாந்து சால்வை உள்பட உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏலம் விடப்படவுள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தனக்கு பரிசாக கிடைத்த அனைத்து பொருள்களையும் ஏலம்விட முடிவெடுத்த முதல் இந்திய பிரதமா் மோடி ஆவாா்.இதுவரை பிரதமருக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற 1,000-க்கும் மேற்பட்ட பரிசுபொருள்கள் ஏலம்விடப்பட்டு ரூ.50 கோடி திரட்டப்பட்டது. இது கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக வழங்கப்பட்டது.
பிரதமா் மோடிக்கு 2024, பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் அளித்த பரிசும் இணையவழி ஏல முறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
பாரம்பரிய கலை, ஒவியங்கள், கல்வெட்டுகள், கைவினை மற்றும் பழங்குடியின கலைப்பொருள்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் கலாசாரத்துக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் பிரதமருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது இந்தப் பொருள்கள் அனைத்தும் நவீன கலைக்கான தேசிய அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.
தங்களது ஏலத்தொகையை முடிவுசெய்யும் முன் ஏலத்தில் பங்கேற்போா் இந்தப் பொருள்களை பாா்வையிடலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.