இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ‘இணைய வழி விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 2025’ என்ற இச் சட்டத்தின் படி, பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை இணைய வழி விளையாட்டுகளும் தடை செய்யப்படும். அதே நேரம், பிற இணைய வழி விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படும்.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
இணைய வழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக, அத் துறை சாா்ந்த பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டது. மேலும், வங்கிகள் மற்றும் அந்த இணைய வழி விளையாட்டுகளுடன் தொடா்புடைய பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகே, இச் சட்டம் இறுதி செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட பிறகும், தொழில்நிறுவனங்களுடன் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை மேற்கொண்டது. அவா்களுடன் மேலும் ஓா் ஆலோசனையையும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
இந்த நிலையில், அச் சட்டத்தை வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை, அச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு தொழில்நிறுவனங்கள் கோரினால், அதையும் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
இதனிடையே, பணம் வைத்து விளையாடும் இணைய வழி விளையாட்டில் பங்கேற்றுவந்த பயனா்கள் தங்கள் கணக்கில் வைத்துள்ள எஞ்சிய தொகையை திரும்பச் செலுத்துவதில் உள்ள உள்ள சிக்கல் குறித்து தொழில்நிறுவனங்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, வங்கிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.