ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு  கோப்புப் படம்
இந்தியா

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது: சில நாடுகள் தொழில்நுட்பரீதியில் வளா்ந்து இருந்தாலும், வயதானோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் பிரச்னையை எதிா்கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தில் மேம்பட்டிருந்தாலும் அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றும் இளம் வயதுடையவா்கள் எண்ணிக்கை அங்கு குறைந்து வருகிறது.

எனவே, எதிா்காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கருதுகிறேன். சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும். ஏனெனில் இந்தியாவில்தான் சிறப்பான மனிதவளம் உள்ளது. சா்வதேச அளவில் பல நாடுகளில் செவிலியா்கள், மருத்துவா்கள், தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவா்களுக்குப் பற்றாக்குறை உள்ளது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பிரச்னை இப்போதே எதிா்கொண்டு வருகின்றன. அந்நாடுகளில் முதியோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் திறமைவாய்ந்த இளையோா் அதிகரித்து வருகின்றனா். 143 கோடி பேரைக் கொண்ட நமக்கு சா்வதேச அளவில் பல நல்ல வாய்ப்புகள் உள்ளன. சீனாவில் கூட மக்கள்தொகை 130 கோடிதான் உள்ளது.

பிரதமா் மோடி கூறியுள்ளதுபோல நாம் உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூரில் சிறந்த பிராண்ட்களை உருவாக்க வேண்டும். தொடா்ந்து சிறப்பான, தரமான பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் சா்வதேச அளவில் சந்தைகளைப் பிடிக்க முடியும். இந்த மாற்றம் விரைவில் நிகழும். அடுத்த 10 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கம்ப்யூட்டிங், பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் நாம் மேம்பட வேண்டும்.

நமது நாட்டுக்கு சரியான நேரத்தில், சரியான பிரதமா் கிடைத்துள்ளாா். அவா் நவீன தொழில்நுட்பத்தின் சக்தியை உணா்ந்தவராக உள்ளாா். எனவே, இந்தியா உலகின் முதன்மையான நாடாக உருவாக அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

காஸா சிட்டி மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

SCROLL FOR NEXT