அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொருட்டு, அதிபர் டிரம்ப் அறிவித்த எச்-1பி விசா கட்டண உயர்வு முதலில் விசா பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வருவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவுக்கு வந்து எச்-1பி விசா பெற்று பணியாற்ற, இதுவரை இருந்த கட்டணம் ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.
இதைத்தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என அமெரிக்க வணிகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் தெரிவித்திருந்தார்.
எச்-1பி விசா பெற ஆண்டுக்கு ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என வெளியான இந்த அறிவிப்பு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால், எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருவோர் ஆண்டுக்கு ரூ.88 லட்சம் கொடுத்து அமெரிக்க நிறுவனங்கள் பழைய ஊழியர்களை தக்க வைப்பார்களா? புதிய திறமை அதிகம் வாய்ந்த ஊழியர்களை அழைத்து வருவார்களா? நமக்கு வேலை நீடிக்குமா? என்றெல்லாம் ஒரு நாள் முழுக்கக் குழம்பியிருப்பார்கள்.
ஆனால், மறுநாளே, அமெரிக்க அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தது.
உயா்த்தப்பட்ட எச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணம் ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என அமெரிக்கா விளக்கம் கொடுத்தது.
மேலும், எச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்களுக்கு இந்த கட்டண உயா்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு அடுத்த நாள் அளித்த விளக்கத்தில் கூறியிருக்கிறது.
இதனால், அமெரிக்காவில் ஏற்கனவே எச்-1பி விசா பெற்று பணியாற்றுவோருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் ரூ.88 லட்சம் செலுத்தி புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தாது, ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். இதனால், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்திருப்பதால், இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் பணியாற்றும் எச்-1பி விசா பெற்றிருப்பவர்களுக்கே அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க... பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.