ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேரள மொழியான மலையாளத்தில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசினை அளித்தது.
அம்மா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமிர்தவர்ஷம் 72 என்ற பெயரில் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, கேரளத்திலுள்ள அமிர்தபுரியில் அமிர்த விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாதா அமிர்தானந்தமயியைப் பெருமைப்படுத்தும் வகையில் கேரள மாநில அரசின் சார்பில் பாராட்டுப் பத்திரத்தை கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத் தலைவர் சுவாமி அமிர்தஸ்வரூபானந்த புரி தலைமை தாங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் சஜி செரியன், மலையாள மொழியின் பலத்தையும், கேரள மாநில கலாசாரத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியவர் அம்மா. சர்வதேச அரங்கில், மலையாளத்தில் அம்மா உரையாற்றியது, தங்களது சொந்த தாய் மொழியை அலட்சியம் செய்பவர்களுக்கான சக்திவாய்ந்த செய்தியாக அமைந்திருந்தது. இது வெறும் பாராட்டு விழா மட்டுமல்ல, இது கலாசார விழிப்புணர்வு. இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார்' என்று கூறினார்.
ஐக்கிய நாடுகள் அவையில் மலையாளம் ஒலித்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கரவொலிகளால் அதற்கு பதிலளித்தனர் என ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முறையாக கேரளத்தின் குரல் ஒலித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.
ஐ.நா. அவையில் உரையாற்றிய அமிர்தானந்த மயி, தனக்குக் கிடைத்த கௌரவத்தை மலையாள மொழிக்கே அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டிருந்தார். "எனக்கு இங்கு கிடைத்திருக்கும் பெருமையை மலையாள மொழிக்கே அர்ப்பணிக்கிறேன், அதுதான் எங்களுக்கு அடையாளத்தையும் வடிவத்தையும் கொடுத்தது. பெற்றோர் அனைவரும், தங்களது பிள்ளைகள், அவர்களது தாய் மொழியைப் பாதுகாக்கவும், பெருமைப்படவும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ சிஆர் மகேஷ், உமா தாமஸ் ஆகியோரும் உரையாற்றினர். பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், காவல்துறை ஐ.ஜி. லட்சுமணன், கேரள சட்ட மைய இயக்குநர் நாகராஜ் நாராயணன், நடிகர் தேவன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோரும் பங்கேற்றனர்.
நிறைவாக சுவாமினி சுவித்யாமிருத பிராணா நன்றியுரை ஆற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.