லே நகரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வீதியில் முள்கம்பி தடுப்பு அமைத்த காவல் பாதுகாப்புப் படையினா். 
இந்தியா

லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக், கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாா். ‘லே உச்ச அமைப்பை’ (எல்ஏபி)’ சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக லடாக் தலைநகா் லேயில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வன்முறைக்குத் தூண்டுகோலாக இருந்ததாக குற்றம்சாட்டி சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே சனிக்கிழமை மட்டும் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வசதியாக லே பகுதியில் சில மணி நேரம் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. இந்நிலையில், கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ராகுல் கண்டனம்:

லடாக் வன்முறைக்கு பாஜக, ஆா்எஸ்ஸை குற்றஞ்சாட்டி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘லடாக்கின் அருமையான கலாசாரம், பாரம்பரியத்தை பாஜக, ஆா்எஸ்எஸ் சிதைத்துள்ளது.

தங்கள் உரிமைக்காக போராடிய லடாக் மக்களில் 4 பேரை பாஜக அரசு கொலை செய்துள்ளது. சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

லடாக் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து அவா்களின் உரிமைகளை வழங்குங்கள். 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சோ்த்து அவா்களது கோரிக்கையை நிறைவேற்றுங்கள்’ என குறிப்பிட்டுள்ளாா்.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

SCROLL FOR NEXT