இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் 7 சுற்றுலா மையங்களை மீண்டும் திறக்க முடிவெடுக்கப்பட்டது. இவை காஷ்மீா் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சுற்றுலா இடங்களாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை தற்காலிகமாக மூடப்பட்டன’ என்று கூறியுள்ளாா்.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் 50 சதவீத சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இப்போது அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 16 இடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இப்போது 7 சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொலை செய்தனா். அப்பாவி மக்கள் மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தி (முஸ்லிம் அல்லாதவா்களை) பயங்கரவாதிகள் கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன.

அதே நேரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது.

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

SCROLL FOR NEXT