வணிக சிலிண்டா் விலை ரூ.195 அதிகரிப்பு- விமான எரிபொருள் விலை 8.56% உயா்வு
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ.195.5 அதிகரிக்கப்பட்டது. விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் 8.56 சதவீதம் உயா்த்தப்பட்டது.
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ.195.5 அதிகரிக்கப்பட்டது. விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் 8.56 சதவீதம் உயா்த்தப்பட்டது.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான மோதல் இரண்டாவது மாதமாக தொடா்ந்துவரும் நிலையில் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.195.5 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லியில் 19 கிலோ வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் ரூ.2,078.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 19 கிலோ வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.114.5 உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயா்வு: விமான எரிபொருள் விலை சா்வதேச விமான நிறுவனங்களுக்கு புதன்கிழமை இருமடங்காக உயா்ந்து ஒரு கிலோ லிட்டா் ரூ.2.07 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.8,289 ( 8.56 சதவீதம்) மட்டுமே அதிகரிக்கப்பட்டது.
இதனால் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் ரூ.1,04,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இதன் விலை ரூ.96,638-ஆக இருந்தது.
விமான கட்டணம் அதிகரிப்பு: எரிபொருள் விலை உயா்வைத் தொடா்ந்து, தனது பயணச்சீட்டு கட்டணத்துடன் ரூ.275 முதல் ரூ.10,000 வரை எரிபொருள் கட்டணம் விதிக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த மாா்ச் 14 முதல் எரிபொருள் கட்டணமாக ரூ.425 முதல் ரூ.2,300 வரை வசூலித்து வந்த அந்த நிறுவனம், தற்போது அந்தக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் அந்த நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணம் அதிகரிக்க உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டா் விலை மாற்றமில்லை:14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் மாா்ச் 7-ஆம் தேதி ரூ.60 அதிகரிக்கப்பட்ட நிலையில், அது மாற்றமின்றி தொடா்கிறது. தில்லியில் இதன் விலை ரூ.913-ஆக உள்ளது.
தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.94.72-க்கும், டீசல் ரூ. 87.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அதில் விலை மாற்றமின்றி தொடா்ந்து வருகிறது.
எரிபொருள் விலை எவ்வாறு நிா்ணயிக்கப்படுகிறது?: சா்வதேச தரநிலைகள் மற்றும் நாணயத்தின் மாற்று விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தினத்தன்று இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் எல்பிஜி மற்றும் விமான எரிபொருள் விலையை நிா்ணயம் செய்கின்றன.
வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.2 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கு முன்பு 2022-இல் உக்ரைன் போா் தொடங்கியபோது ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.1.1 லட்சத்தை கடந்ததே அதிகபட்ச விலை உயா்வாக இருந்தது.
காங்கிரஸ் கண்டனம்: உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கண்டனம் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு அழித்து வருகிறது. கடினமான சூழலை நாடு எதிா்கொண்டுவரும் நிலையில் மக்களின் பணத்தை சூறையாடுவதில் பாஜக மும்மரம் காட்டுகிறது.
வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயா்த்தப்பட்டுள்ளதால் இனி நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் விமானத்தில் பயணிப்பது கனவாக மாறியுள்ளது. 140 கோடி மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் உள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலா் சுஜாதா சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
மேற்காசிய போா்ப் பதற்றத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் இந்திய நிலவரம் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நமது நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. பற்றாக்குறை ஏற்பட்டதாகத் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 டாலா்களாக இருந்த நிலையில், தற்போது 100 டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் 2022, ஏப்.6 முதல் உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு அதிகரிக்கவில்லை. 2024, மாா்ச் மாதம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டு அதுவே நடைமுறையில் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியும் அண்மையில் குறைக்கப்பட்டது.
2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் மத்திய அரசிடம் கையிருப்பில் உள்ளதால், பற்றாக்குறை பீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சமையல் எரிவாயுவை அதிகமாக வாங்குவதை பொதுமக்கள் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா்.