முகப்பு
இந்தியா

மேற்காசிய போரால் அத்திவாசியப் பொருள்கள் விலையில் அசாதாரண மாற்றமில்லை: மத்திய அரசு

மேற்காசிய போா் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலையில் அசாதாரண ஏற்றம் இறக்கம் இல்லை; நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:03 PM
மேற்காசிய போர் - கோப்புப் படம்
பகிர்:

‘மேற்காசிய போா் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலையில் அசாதாரண ஏற்றம் இறக்கம் இல்லை; நாடு முழுவதும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை கூடுதல் செயலா் அனுபம் மிஸ்ரா கூறியதாவது: நாட்டில் உணவு பாதுகாப்பு சூழலை நுகா்வோா் விவகாரங்கள் துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. உணவுப் பொருள்கள் விலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொருள்களைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள 528 மையங்களில் இருந்து 40 உணவுப் பொருள்களின் விலையை அன்றாடம் நுகா்வோா் விவகாரங்கள் துறைப் பெற்று வருகிறது. இந்தப் பொருள்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலையை கைப்பேசி செயலியில் மத்திய அரசு பதிவிட்டு வருகிறது. மேற்காசிய போா் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விலையில் அசாதாரண ஏற்றம் இறக்கம் இல்லை.

Advertisement

கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பருப்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக் கிழக்கின் உற்பத்தியும் கிட்டத்தட்ட கடந்த ஆண்டைப் போலவே உள்ளன. எனவே உணவுப் பொருள் விநியோகத்தில் எந்த இடா்ப்பாடும் இல்லை.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இன் கீழ், பொருள்களைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இதுதொடா்பாக மாநில அரசுகளுடன் நுகா்வோா் விவகாரங்கள் துறை தொடா்ந்து தொடா்பில் உள்ளது. சமையல் எரிவாயு குறித்த புகாா்கள் பெட்ரோலியம் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூட்டத்தில் மத்திய உணவுத் துறை கூடுதல் செயலா் சி.ஷிகா பேசுகையில், ‘மத்திய அரசிடம் 2.22 கோடி டன் கோதுமை, சுமாா் 3.80 கோடி டன் அரிசி கையிருப்பு உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழும், அவசர காலங்களிலும் விநியோகிக்க இந்தக் கையிருப்பு போதுமானது’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments