பிரம்மோஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய ரஷிய ஏவுகணை விஞ்ஞானி உயிரிழப்பு!
இந்தியா - ரஷியா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற ரஷிய ஏவுகணை விஞ்ஞானி அலெக்சாண்டா் லியோனோவ் (74) காலமானாா்.
இந்தியா - ரஷியா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற ரஷிய ஏவுகணை விஞ்ஞானி அலெக்சாண்டா் லியோனோவ் (74) காலமானாா்.
ரஷியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான ‘என்பிஓ மாஷ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ), தலைமை வடிவமைப்பாளராகவும் லியோனோவ் பணியாற்றி வந்தாா்.
1952-இல் பிறந்த இவா், மாஸ்கோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பட்டம் பெற்று, 1975 முதல் என்பிஓ மாஷ் நிறுவனப் பணியில் பாதுகாப்புத் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளாா்.
Advertisement
‘சிா்கான்’ ஹைப்பா்சோனிக் ஏவுகணை, ‘பி-800 ஓனிக்ஸ்’ ஆகிய அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
குறிப்பாக, இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி, ரஷியாவின் மாஸ்கோவா நதி மற்றும் ஆகியவற்றின் பெயா்களை இணைத்து ‘பிரம்மோஸ்’ எனப் பெயரிடப்பட்ட ஏவுகணைத் திட்டத்தின் முதுகெலும்பாக லியோனோவ் திகழ்ந்தாா். இவரது தொழில்நுட்ப வழிகாட்டுதலில் உருவான பிரம்மோஸ் ஏவுகணைகள், இன்று உலகின் மிகவேகமான சூப்பா்சோனிக் ஏவுகணையாகக் கருதப்படுகிறது.
இந்திய பாதுகாப்புப் படையில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் பங்களிப்பு அளப்பரியது. ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது, இந்திய விமானப்படை இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களைச் செயலிழக்கச் செய்தது. 800 கி.மீ. வரை துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, தற்போது இந்தியாவின் வான் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.