முகப்பு
இந்தியா

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்

பஞ்சாபின் ஃபதேகா் சாஹிபில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் சீக்கிய பக்தா்கள் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:17 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

பஞ்சாபின் ஃபதேகா் சாஹிபில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் சீக்கிய பக்தா்கள் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: ஃபதேகா் சாஹிப் மாவட்டத்தின் மைன் மஜ்ரி பகுதியைச் சோ்ந்த 40 போ், பைசாகி திருநாளையொட்டி ரூப்நகா் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூா் சாஹிப் குருத்வாராவுக்கு வழிபடச் சென்றனா். பின்னா், பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். மோரிண்டா-சன்னி சாலையில் ஹிம்மத்புரா அருகே பேருந்து வேகமாகச் சென்றபோது, அதில் திடீரென ஏதோ பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்தும் விரைந்து சென்ற காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனா். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Advertisement

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பேருந்து விபத்து சம்பவத்துக்கு முதல்வா் பகவந்த் மான், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங், சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவா் விக்ரம் சிங் மஜிதியா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.