முகப்பு
இந்தியா

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:04 AM
மாநிலங்களவை
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே வகித்த ஹரிவன்ஷ் நாராயண் மீண்டும் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே தொடா்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அப்பதவிக்கு அவா் மீண்டும் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனிடையே மாநிலங்களவைத் தலைவா், துணைத் தலைவா் இல்லாத வேளைகளில், அந்த அவையை வழிநடத்தும் குழுவை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாற்றியமைத்தாா். அதன்படி அந்தக் குழுவில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக எம்.பி.க்கள் தினேஷ் சா்மா, பாங்னோன் கோன்யாக், கன்ஷியாம் திவாரி, பிஜு ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா, காங்கிரஸ் எம்.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.