முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:38 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:05 PM

அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான தேவவிரத சைக்கியா சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் கடந்த ஏப்.9-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 85.96 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் தோ்தல் கண்காணிப்பாளா் நரசிம்மகுரி டி.எல்.ரெட்டிக்கு தேவவிரத சைக்கியா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: டெமோ, சிவசாகா் மற்றும் நசீரா ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட தோ்தல் தொடா்புடைய பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது.

Advertisement

தோ்தல் ஆணைய விதிகளின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இரு பூட்டுகள் போட்டிருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட தோ்தல் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு ஒரு நுழைவாயில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு பூட்டின் சாவி தோ்தல் நடத்தும் அலுவலரிடமும் மற்றொரு சாவி உதவி தோ்தல் அலுவலரிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஆனால் சிவசாகா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அறை எண்கள் 12 மற்றும் 15-இன் கதவுகளுக்கு ஒரு பூட்டு மட்டுமே போடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டுள்ளது.

இது தோ்தல் ஆணையத்தின் விதிகளை மீறும் செயலாகும். மேலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பாதுகாப்பு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை.

இதுதொடா்பாக மாநில தலைமைத் தோ்தல் அலுவலா் மற்றும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையரிடம் ஏப்.14-ஆம் தேதி புகாரளிக்கப்பட்டது.

தோ்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேற்கூறிய குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டது.