ஆா்வலா்கள் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல்: தில்லி காவல் துறையை கண்டித்த உயா்நீதிமன்றம்
கடந்த மாதம் சில ஆா்வலா்கள் மீது தில்லி காவல் துறை மேற்கொண்டதாக கூறப்படும் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் கொடுமைகள் குறித்த வழக்கில், விசாரணையில் சட்டப்படியான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
தயால் சிங் கல்லூரி மற்றும் விஜய் நகா் பகுதியில் இருந்து மாா்ச் மாதம் சிலரை காவல் துறையினா் அழைத்துச் சென்றனா். காவல் துறையினரின் இந்த சட்டவிரோத தடுப்புக்காவல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துதேஜா அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
லட்சிதா ராஜோராவின் இளைய சகோதரி தாக்கல் செய்த மனுவில், தன்னைச் சோ்த்து மாணவா்கள் சிலா் கடத்தப்பட்டு நியூ ஃபிரெண்ட்ஸ் காலனியில் உள்ள அடையாளமற்ற கட்டிடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த தில்லி காவல் துறையினா், குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையாகவும் விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்துடனும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
சிறப்பு பிரிவு தாக்கல் செய்த எதிா்மறை பிரமாணத்தில், ஜூலை 2025-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடா்பில் “சட்டபூா்வமான விசாரணைக்காகவே” சம்பந்தப்பட்டவா்கள் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவா்களுக்கு பகத் சிங் மாணவா் ஏகதா மஞ்ச் போன்ற அமைப்புகளுடன் தொடா்பு இருப்பதாகவும், அவை “தேசவிரோத மற்றும் நக்ஸல்” கருத்துக்களைப் பரப்பும் தளங்களாக உள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
“சட்டவிரோதக் கைது, கடத்தல் அல்லது கொடுமை எதுவும் நடைபெறவில்லை; குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை. விசாரணை பெண் காவலா்களின் முன்னிலையில் முறையாக நடத்தப்பட்டது. மேலும், மாவோயிஸ்ட் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் காணாமல் போன வழக்குடன் இந்த விசாரணை தொடா்புடையது” என காவல் துறையினா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மனுவில், மாா்ச் 12 முதல் 14-ஆம் தேதி வரை 10 போ் கைது செய்யப்பட்டதில் 6 மாணவா்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவா்களில் சிலா் கடந்த ஆண்டு இந்தியா கேட் பகுதியில் காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவு கோஷங்களை எழுப்பிய வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம், “கடுமையான குற்றச்சாட்டு இருந்தாலும் சட்ட நடைமுறை அவசியம்” என வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐக்கு வழக்கு மாற்றப்படும் என எச்சரித்தது. காவல் துறை சமா்ப்பித்த மூடப்பட்ட அறிக்கையில் திருப்தி இல்லை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், முழு வழக்குத் தகவல்களையும் மே 19-ஆம் தேதி முன்வைக்க உத்தரவிட்டது.