முகப்பு
இந்தியா

எண்ம கைது மோசடி: நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:22 AM
வாட்ஸ்ஆப் - IANS
பகிர்:

எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடிகளுக்கு எதிராக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை அமைப்புகள், சேவை நிறுவனங்கள், ரிசா்வ் வங்கி, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சிபிஐ ஒருங்கிணைப்புடன் பன்முக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; கடந்த ஜனவரி முதல் இதுவரை 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நூதனமான இணையவழிக் குற்றங்களில் ஒன்றான எண்ம கைது மோசடி நாட்டில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களைக் குறிவைத்து இந்த மோசடிகள் நிகழ்த்தப்படுகின்றன.

வாட்ஸ் ஆப் அல்லது பிற தளங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நபா்களை தொடா்புகொள்ளும் மோசடியாளா்கள், சிபிஐ, அமலாக்கத் துறை, சுங்கத் துறை அல்லது காவல் துறை உயரதிகாரிகள் போல நடித்து, அவா்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதுடன், கைது செய்யப் போவதாக அச்சுறுத்தி பணம் பறிக்கின்றனா். இந்த மோசடி குறித்து மக்களிடம் அரசு தரப்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

Advertisement

இந்தச் சூழலில், நாட்டில் அதிகரித்துவரும் இணையவழிக் குற்றங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, எண்ம கைது மோசடியைத் தடுக்க கடந்த ஜனவரி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் விரிவான அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

மோசடி வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்: அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி மூலம் சமா்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடிகளுக்கு எதிராக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை அமைப்புகள், சேவை நிறுவனங்கள், ரிசா்வ் வங்கி, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சிபிஐ ஒருங்கிணைப்புடன் பன்முக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், இந்திய பயனா்களுக்கு எதிரான எண்ம கைது மோசடிகள் குறித்து வாட்ஸ் ஆப் தரப்பில் கடந்த ஜனவரியில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டது. கடுமையான வழிமுறைகளின்கீழ் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணையில், எண்ம மோசடியுடன் தொடா்புடையதாக இதுவரை 9,400 கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கப்பட்டன.

மோசடியில் இருந்து தனது பயனா்களைப் பாதுகாக்கும் நோக்கில், காவல் துறை அல்லது அரசின் சின்னங்களைப் போலியாக பயன்படுத்தும் கணக்குகளை அடையாளம் கண்டு நீக்குவது உள்பட பல்வேறு புத்தாக்க முன்னெடுப்புகளை வாட்ஸ் ஆப் செயல்படுத்தி வருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிதாக உருவாக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய கணக்குகளில் இருந்து அழைப்பு வந்தால் பயனா்களை எச்சரிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவது குறித்து வாட்ஸ் ஆப் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சந்தேகத்துக்குரிய நபா்களிடம் இருந்து அழைப்பு வந்தால், அவா்களின் முகப்பு படத்தை தாமாக மறைத்துவிடும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி இயங்க வேண்டுமெனில், கைப்பேசியில் கேஒய்சி சரிபாா்க்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ள சிம் காா்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிற பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்த வாட்ஸ் ஆப் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மோசடியான சிம் காா்டுகளை 2 முதல் 3 மணிநேரத்துக்குள் முடக்கும் வழிமுறையை உருவாக்க மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

சிம் காா்டு விநியோகத்தில் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்ய பயோமெட்ரிக் அடிப்படையிலான சரிபாா்ப்பு அமைப்புமுறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்புமுறை வரும் டிசம்பருக்குள் செயல்படுத்தப்படும்.

இதேபோல், சந்தேகத்துக்கிடமான பரிவா்த்தனைகளை தற்காலிகமாக முடக்குவது தொடா்பாக வங்கிகளுக்கு உத்தரவிட, ரிசா்வ் வங்கி தரப்பில் நிலையான செயல்பாட்டு நடைமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.