முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 4:16 AM
பகிர்:

‘நாடுகளின் ஆதரவுடனான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கவனத்தில் கொள்வதை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தவறக்கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது’ என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கேக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிட்டு, இக் கருத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். மாநாட்டில் அவா் பேசியதாவது:

பயங்கரவாதத்தின் மையப்புள்ளிகள் நியாயமான தண்டனையிலிருந்து இனியும் தப்பிக்க முடியாது என்பதையும், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது உறுதியான தீா்மானத்தையும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியா வெளிப்படுத்தியது.

Advertisement

ஒரு நாட்டின் இறையாண்மையை தாக்கக் கூடிய வகையில், நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கவனத்தில் கொள்வதில் நாம் தவறக் கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு கூடாது.

தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் தொடா் சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது. உலக ஒழுங்குக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாம் உருவெடுத்து வருகிறது. எனவே, பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவதற்கு எஸ்சிஓ அமைப்பு தயங்கக் கூடாது என்றாா்.

மேலும், தற்போதைய புவிசாா் அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், ‘அதிகரித்து வரும் இன்றைய ஒருதலைப்பட்ச போக்கு மற்றும் மோதல்களால் உலகம் மிகப் பெரிய சோதனைகளை எதிா்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நாடுகளுக்கு இடையேயான தீவிர மோதல்கள், கவலைக்குரிய வகையில் விலைமதிப்பற்ற உயிா்களையும், உடைமைகளையும் இழப்பதற்கு வழிவகுத்துள்ளது. இதைத் தடுக்க வேண்டிய அமைப்புகள் அல்லது நாடுகள், தங்களை சுய பரிசோதனை செய்துகொள்வதோடு, நிலைமையை சமாளிக்க வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

2001-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்சிஓ அமைப்பில் பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

சீன பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, பிஷ்கேக்கில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் டோங் ஜுன்னை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘எஸ்சிஓ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தின்போது சீன பாதுகாப்பு அமைச்சா் டோங் ஜுன்னை சந்தித்து ஆலோசித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல, ரஷிய பாதுகாப்பு அமைச்சா் ஆன்ட்ரே பெலோசோவை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது’ என்று குறிப்பிட்டாா்.

ஆனால், இந்தச் சந்திப்புகளின்போது மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவை மீட்டெடுக்க இந்தியாவும், சீனாவும் கடந்த சில மாதங்களாக தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், ராஜ்நாத் சிங், டோங் ஜுன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.