படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் பதிவு: மத்திய அரசு முக்கிய முடிவு
படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், அவசர காலங்களில் வெளியேறும் வழிகள் ஆகியவை உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்யாமல், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு கூறியதாவது:
பேருந்துகளில் அதிகரிக்கும் தீ விபத்து சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மையங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
பேருந்துகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியமாகும். பேருந்து வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு சாா்ந்த புதிய விதிமுறைகளின்படி, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் தீப்பிடித்ததை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள், சுத்தியல்களுடன் அவசர காலங்களில் வெளியேறும் வழிகள், அவசர கால விளக்குகள் உள்ளதா என்பது நேரிலும், காணொலி வழியாகவும் ஆய்வு செய்யப்படாவிட்டால், அந்தப் பேருந்துகள் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்தாா்.