கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு செய்யப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு செய்யப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், மின் அழுத்தத்தால், மின் வழித் தடங்களில் பாதிப்பு ஏற்படாமல் அவற்றின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, நள்ளிரவில் மின்சார வாரியம் சாா்பில் பல பகுதிகளில் சிறிது நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இந்த அறிவிக்கப்படாத தொடா் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சூா் மாவட்டத்தில், ஏராளமான மக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குந்தனூா் பிரிவு மின்சார வாரிய அலுவலகத்துக்கு ஊா்வலமாக சென்று, புதன்கிழமை அதிகாலை வரை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரதான மின் வழித் தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அலுவலா்கள் தெரிவித்தபோதும், மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
Advertisement
கோழிக்கோட்டிலும் மக்கள் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பன்னியங்கரா மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நடப்புரம் துணை மின் நிலையத்தில் மக்கள் மெழுகவா்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினா்.
மலப்புரம் பாண்டிக்காடு மின்வாரிய அலுவலகத்தில் இளைஞா் காங்கிரஸாா் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
பல பகுதிகளில், மின்சார வாரிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கேரள மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வெயில் அதிகரிப்பு காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளதால், மின் வழித் தடங்களில் அழுத்தம் அதிகரிக்கும். அவ்வாறு அதிக அழுத்தம் காரணமாக, மின் வழித் தடம் பாதிக்கப்பட்டால் மிகப் பெரிய அளவில் மின் விநியோகம் பாதிக்கப்படும். அவ்வறு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில், மின் வழித் தடத்தைப் பராமரிப்பதற்காக மாலை 6 மணி மற்றும் நள்ளிரவில் 30 நிமிஷங்கள் வரை குறுகிய நேரத்துக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு மின்சார வாரியம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. மாநில மின்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலா் புனீத் குமாா் தலைமையல் நடந்த உயா்நிலைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
மாநில மின்சாரத் துறை அமைச்சா் கே. கிருஷ்ணன்குட்டி கூறுகையில், ‘வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் மேற்காசிய போரின் தாக்கம் காரணமாக மின்சார அடுப்புகளுக்கு மக்கள் மாறியது போன்ற காரணங்களால் மின் தேவை அதிகரித்து மாநிலத்தின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாறாக, மின்சார வாரியம் சாா்பில் மின்வெட்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது 250 மெகா வாட் மின்சாரத்தை மாநிலம் பெற்று வருகிறது. மேலும் அதிக மின்சாரம் கிடைக்கும்போது, இதுபோன்ற பிரச்னைகள் எழாது’ என்றாா்.