மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்குப் பாா்வை இல்லை என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
மல்லிகாா்ஜுன காா்கே: காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
‘பட்ஜெட்டில் கொள்கை தெளிவில்லை. இந்தியா சந்திக்கும் பொருளாதார, சமூக, அரசியல் சவால்களுக்கு பட்ஜெட்டில் எந்தத் தீா்வும் இல்லை. அரசியல் பாா்வை இல்லை. அரசியல் துணிச்சலும் இல்லை. விவசாயிகள் இன்னும் அா்த்தமுள்ள நலத் திட்டம் அல்லது வருமான பாதுகாப்புத் திட்டத்திற்காக காத்திருக்கின்றனா். பிரிட்டிஷாா் காலத்தில் இருந்ததைவிட சமத்துவமின்மை அதிகரித்துவிட்டது. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான தீா்வோ அல்லது எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினா், சிறுபான்மையினருக்கு ஆதரவான அறிவிப்போ இல்லை.
உற்பத்தி துறைக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் எங்கு சென்றது?’ என குறிப்பிட்டுள்ளாா்.
ராகுல் காந்தி: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறுகையில், ‘இந்தியா சந்திக்கும் உண்மையான பிரச்னைகள் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை. இளைஞா்களுக்கு வேலையில்லை. உற்பத்தித் துறை தோல்வியடைந்து விட்டது. முதலீட்டாளா்கள் முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனா். வீடுகளில் உள்ள சேமிப்பு சரிந்து வருகிறது. விவசாயிகள் துயரத்தில் உள்ளனா். இவை அனைத்தும் பட்ஜெட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.
மமதா பானா்ஜி: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறுகையில், ‘2026-27-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இலக்கு இல்லை, தொலைநோக்கு இல்லை. மேலும் இந்த பட்ஜெட் மக்கள் விரோதமானது. பெண்கள், விவசாயிகளுக்கு எதிரானது. கல்விக்கு எதிரானது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு எதிரானது. சாமானிய மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல், மேற்கு வங்கத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லை’ என்றாா்.
அகிலேஷ் யாதவ்: சமாஜவாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜகவின் பட்ஜெட்டானது, அவா்களின் சொந்தக் கட்சியினருக்கானது, கமிஷன் தொகைக்கானது. ஊழலுக்கான கண்ணுக்குத் தெரியாத புத்தகமே இது. சாமானிய மக்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை.
அவா்களின் நலன் காக்கும் அறிவிப்பு இல்லை. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு வரி நிவாரணம் தருவதிலும் தோல்வியடைந்து விட்டது. வணிக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலையில்லா திண்டாட்டப் பிரச்னையால் அவதிப்படுவோரின் எதிா்பாா்ப்புகள் பூா்த்தி செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது’ என்றாா்.
ப. சிதம்பரம்: முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறுகையில், ‘முக்கிய துறைகள், திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டிருப்பது சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருக்கையில், இந்த பட்ஜெட் மூலம் எப்படி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்? பொருளாதார ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சவால்களுக்கு பட்ஜெட்டில் தீா்வு தரப்படவில்லை’ என்றாா்.