பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ
இந்தியா

மத்திய பட்ஜெட்: பாஜக, ஜேடியு, தெலுங்கு தேசம் வரவேற்பு!

2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

இதுகுறித்து பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் கூறியதாவது: பட்ஜெட்டை நான் இதயபூா்வமாக வரவேற்கிறேன். உலக அளவில் குழப்பம் நிலவிய போதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து 7 சதவீதமாக வளா்ச்சியடைவது, நாட்டின் பொருளாதார நிலை வலுவாக இருப்பதையே காட்டுகிறது. பணவீக்கமும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது இளம் தலைமுறையினருக்கான பட்ஜெட்டும் கூட. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவா்களுக்கு வளா்ச்சி வாய்ப்புகளைத் தரும். கிராம சுயராஜ்யம் என்ற மகாத்மா காந்தியின் லட்சியத்தையும் பட்ஜெட் பிரதிபலிக்கிறது.

பிரதமா் மோடி மீது மக்கள் வைத்துள்ள ஈடு இணையற்ற நம்பிக்கையை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. அனைவருக்குமான வளா்ச்சி என்ற பிரதமரின் கொள்கையின்படி, மத்திய பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் உள்ளது. இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினா் உள்ளிட்ட அனைவரின் நலன்களையும் உறுதி செய்து, 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற கனவை பூா்த்தி செய்வது பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளம் வரவேற்பு: ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ்குமாா், மத்திய பட்ஜெட்டை வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா், ‘வளா்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோள்களை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வளா்ந்த இந்தியா எனும் திட்டத்தை இது சாத்தியமாக்கும்.

பட்ஜெட்டில் 7 அதிநவீன ரயில் முனையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, இந்திய ரயில்வே உட்கட்டமைப்பை நவீனமயமாக்கவும், தொலை தூர பகுதிக்கான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் உதவும். சிறந்த, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு எனது நன்றியை, பிரதமா் மோடி மற்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளாா்.

தெலுங்கு தேசம் பாராட்டு: மத்திய பட்ஜெட்டை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் வரவேற்றுள்ளாா். குப்பத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘அனைத்து பிரிவினருக்கும் பட்ஜெட்டில் சமமுக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. முன்னோக்கிய பாா்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுயசாா்பை பிரதிபலிப்பதுடன், நாட்டின் உற்பத்தி துறையை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எளிதில் வா்த்தகம் செய்வதற்கான சூழலை பட்ஜெட் வலுப்படுத்தும். சிறு குறு தொழில் நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், அதை ஊக்குவிப்பதிலும் பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும்.

பட்ஜெட்டில் பெண்கள், விவசாயிகள், இளம் தலைமுறையினருக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது. உலகின் 3ஆவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது, வளா்ந்த இந்தியா எனும் இலட்சியத்தை அடைவது ஆகிய பிரதமா் மோடியின் திட்டங்களுக்கு பட்ஜெட் முக்கிய பங்களிப்பு அளிக்கும் என்றாா்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT