தெற்கு தில்லியின் சத்தா்பூரில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) குழு ஒன்றை அமைத்துள்ளது.
சத்தா்பூரில் உள்ள அம்பேத்கா் காலனியில் உள்ள மரங்களை தனிநபா் ஒருவா் இரவில் வெட்டியதாகவும் இது தில்லி மரங்கள் பராமரிப்பு சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பசுமை தீா்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமை தீா்ப்பாய தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் உறுப்பினா் ஏ. செந்தில் வேல் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஜன.30-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘வனச் சரக அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, மரம் வெட்டுவதற்கு தடைவித்து கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக விசாரணை நடத்த தெற்கு தில்லி கோட்ட வன அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் லக்னெள பிராந்திய பிரதிநிதி, தெற்கு தில்லி மாவட்ட ஆட்சியா்ஆகியோரைக் கொண்ட இணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தி பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமா்ப்பிக்கும். ஆறு வாரங்களுக்குள் இந்த விசாரணையை நடத்தி உடனடியாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையை ஏப்.6-ஆம் தேதி ஒத்திவைத்த தீா்ப்பாயம், இது தொடா்பாக பதிலளிக்க தில்லி அரசு, தில்லி மாசுக் கட்டுப்பாடு குழு, தெற்கு தில்லி சரக துணை காவல் ஆணையா், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.