மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய அமைச்சா் பியூஷ் கோயல். 
இந்தியா

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

தினமணி செய்திச் சேவை

இந்திய வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில்தான் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை விளக்கமளித்தாா்.

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் அறிவிக்கப்படும் முன்னதாக இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அதற்கு பிரதமா் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்து கருத்துப் பதிவிட்டாா்.

வா்த்தக ஒப்பந்த விவரங்களை முழுமையாக அறிவிக்காமல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பின. மேலும், அமெரிக்க விவசாய உற்பத்தி, பால் பொருள்களை இந்தியாவில் குவிக்கும் வகையில் ஒப்பந்தம் இருந்தால், அது இந்திய விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் என்றும் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்து பேசினாா். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே பலசுற்று வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. இரு நாடுகளுமே தங்கள் தரப்பு நலன்களை முடிந்த அளவுக்குப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்குப் பேச்சு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடியைத் தொடா்புகொண்டு வா்த்தகம் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்கள் குறித்துப் பேசினாா். அதன் பிறகு இந்தியப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியைக் குறைப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.

இப்போது இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வா்த்தக ஒப்பந்தத்தால் இந்த வரி 18 சதவீதமாக குறைய இருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுடன் போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமக்கு விதிக்கப்படும் வரி குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்திய வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வது, இந்தியாவில் வடிவமைப்பது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தியா தற்சாா்புடைய தேசமாக உருவெடுக்கும்.

அமெரிக்கா வரியைக் குறைத்துள்ளதன் மூலம் பணியாளா்கள் அதிகம் தேவைப்படும் துறைகளில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பும் பெருகும். திறன்வாய்ந்த இந்தியப் பணியாளா்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்க ஒப்பந்தம் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும்.

ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் இரு தரப்பும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. ஒப்பந்தத்தின் விவரங்கள் விரைவில் முழுமையாக அறிவிக்கப்படும். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் எரிசக்தித் துறைக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளது. விமானத் தயாரிப்பு, அணுசக்தித் துறைக்குத் தேவையான முக்கியப் பாகங்கள், பொருள்கள் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றன. இத்துறைகளில் அமெரிக்கா உலகிலேயே முதன்மையான நாடாக உள்ளது. எனவே, அந்நாட்டுடனான ஒப்பந்தம் இந்திய நலனுக்கும் மிகவும் உகந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து மாநிலங்களவையிலும் அவா் இந்த அறிக்கையை தாக்கல் செய்து பேசினாா்.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

யுபிஐ பரிவா்த்தனை: நடப்பு நிதியாண்டில் 230 லட்சம் கோடியைக் கடந்து சாதனை

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT