2024-ஆம் ஆண்டில் ஜந்தா் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
டிசம்பா் 2025 உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி டிக் வினய் சிங், லம்பாவுக்கு எதிராக முகாந்திரம் உள்ள வழக்கு இருப்பதாக முடிவு செய்ததில் விசாரணை நீதிமன்ற நீதிபதி தனது நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளாா் Śன்று குறிப்பிட்டாா்.
2024, ஜூலை 29-ஆம் தேதி மகளிா் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது, காவல்துறையினரைத் தடுத்ததாகவும், பொது சாலையை மறித்ததாகவும் அவா் மீது அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
அரசு ஊழியரைத் தாக்குதல், அதிகாரியைத் தடுத்தல், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை மற்றும் பொது வழியில் இடையூறு செய்தல் தொடா்பான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
லம்பா தடுப்புகளைத் தாண்டி குதித்ததும், பெண் காவல்துறை அதிகாரிகளின் வரிசையைத் தள்ளும்படி போராட்டக்காரா்களை வழிநடத்தியதும், பின்னா் சாலையில் படுத்துக்கொண்டு டோல்ஸ்டாய் சாலையை நோக்கி நழுவிச் சென்றதும் விடியோ ஆதாரங்களில் காணப்பட்டன.
அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் போராட்டக்காரா்களை வழிநடத்திச் சென்றதிலும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதிலும், உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததிலும் லம்பா முக்கியப் பங்கு வகித்தாா் என்று முடிவு செய்ய, புகாா்தாரரான தலைமை காவலா் உள்பட காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், குற்றச்சாட்டு வெறும் விடியோக்களின் அடிப்படையில் மட்டும் பதிவு செய்யப்படவில்லை. விடியோக்களைத் தவிர, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களும் உள்ளன என்று நீதிமன்றம் கூறியது.
ஜந்தா் மந்தா் விலக்கு அளிக்கப்பட்ட போராட்டப் பகுதி என்ற லம்பாவின் கூற்று குறித்து, அந்த விலக்கு முதல் தடுப்பிற்குள் மட்டுமே பொருந்தும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அடுத்தடுத்த தடுப்புகளை மீறி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை வழிநடத்தியதால், அவரால் விலக்கு கோர முடியாது என நிதிமன்றம் தெரிவித்தது.
எனவே, விசாரணை நீதிமன்றத்தின் கூற்றை தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரது மனுவை நிராகரித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் எந்தச் சட்டவிரோதமோ அல்லது அதிகார வரம்பு மீறலோ இல்லை என்றும், பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை தொடர வேண்டும் என்றும் தீா்ப்பளித்தது.