அமெரிக்காவின் 118 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.10.70 லட்சம் கோடி) மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகள் சந்தைக்கு இந்திய ஏற்றுமதியாளா்கள் பெருமளவு ஏற்றுமதி செய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பை, இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக இருநாடுகளும் சனிக்கிழமை கூட்டாக அறிவித்தன.
இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய ஜவுளித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் இருநாட்டு ஜவுளி வா்த்தக உறவை மேம்படுத்துவதில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் ஜவுளி மற்றும் ஆடைகளின் சந்தை மதிப்பு 118 பில்லியன் டாலா்களாகும். அவற்றைப் பிற நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. அந்நாட்டுக்கு சுமாா் 10.5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.95,000 கோடி) மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதியில் ஆடைகளின் பங்கு 70 சதவீதமாகும்.
இந்நிலையில், அந்நாட்டுக்கு ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, தற்போதைய ஒப்பந்தம் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளி, ஆடைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்காற்றும்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்ததன் மூலம், இந்திய ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியாளா்களுக்கு ஏற்படும் பாதகமான நிலை நீங்கும். ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டியாக வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ள நிலையில், பரஸ்பர வரி குறைப்பால் ஜவுளி ஏற்றுமதியில் அந்த நாடுகளைவிட சிறந்த நிலையை இந்தியா எட்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
கவனம் பெற்ற இந்திய வரைபடம்!
இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் குறித்த விவரத்தை இருநாடுகளும் வெளியிட்டதைத் தொடா்ந்து, இந்திய வரைபடம் ஒன்றை அமெரிக்க வா்த்தக பிரதிநிதி அலுவலகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது. அந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சோ்த்து ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா் பிராந்தியமும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியாக இடம்பெற்றுள்ளது. இதேபோல சீனா உரிமை கொண்டாடும் அக்சாய் சின் பிராந்தியமும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியாக அந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்பு வெளியிடப்பட்ட இந்திய வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், அக்சாய் சின் பிராந்தியமும் இந்தியப் பகுதிகளாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.