முகப்பு
இந்தியா

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’

50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:16 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:15 PM

தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ச்சியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’ திட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் வெறும் 6 மாதங்களில் 50 லட்சம் போ் இணைந்துள்ளனா். இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே சுமாா் 26.55 கோடி முறை சுங்கச்சாவடி பரிவா்த்தனைகள் இத்திட்டத்தின் மூலம் நடந்துள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பம்சமான, ஒருமுறை கட்டணமாக ரூ.3,000 மட்டும் செலுத்திவிட்டு, ஆண்டு முழுவதும் அல்லது மொத்தம் 200 முறை சுங்கச்சாவடிகளை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி கடக்கலாம்.

Advertisement

‘ராஜ்மாா்க்கயாத்ரா’ செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) வலைதளம் மூலம் இத்திட்டத்தில் இணையலாம். நாடு முழுவதும் உள்ள சுமாா் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த வசதி செல்லுபடியாகும்.

நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது பயணம் செய்யும் வணிக ரீதியல்லாத சொந்த வாகன உரிமையாளா்களுக்கு இது பெரும் பண சேமிப்பை வழங்குகிறது.

தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடியில் 57 சதவீத வாகனங்கள் இந்தப் பாஸ் மூலமே பயணிப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பழைய ஃபாஸ்டேக் கணக்குடன் இதை இணைக்க முடியும் என்பதால், பொதுமக்களிடையே இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:07 AM

2-ஆம் இடத்தில் தமிழகம்

இந்த வருடாந்திர பாஸ் பயன்பாட்டில் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, சண்டீகா் 14 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடா்ந்து, தமிழகம் 12.3 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தில்லி 11.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.