இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரம், இறையாண்மை, வேளாண்மை ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சி அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வா்த்தக ஒப்பந்தத்தை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கக் கூடாது. முதலில் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். அந்த வா்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் இப்போது மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவுடன் மிகப்பெரிய சமரசத்தை செய்துகொண்டது தெரியவருகிறது. இந்த வா்த்தக ஒப்பந்தம் நமது நாட்டின் பொருளாதாரம், இறையாண்மை, வேளாண்மை ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இப்போது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி மட்டுமே பொதுவெளியில் கிடைக்கிறது. அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பழங்கள், பருத்தி, சோயாபீன் எண்ணெய், மரங்களில் விளையும் பருப்புகள் (வால்நட், முந்திரி, பாதாம் உள்ளிட்டவை) போன்ற உணவு, வேளாண் பொருள்களுக்கு வரி கிடையாது என மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் ஆப்பிள், பருத்தி, சோயா விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.
ஏற்கெனவே, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தங்களால் காஷ்மீா், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆப்பிள் விவசாயிகள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா். அடுத்ததாக அமெரிக்க ஆப்பிளும் அதிகம் இறக்குமதியாகும் .இந்திய விவசாயிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே, இடுபொருள்கள் விலை உயா்வால் அவதிப்படும் பருத்தி விவசாயிகளுக்கு அமெரிக்க ஒப்பந்தம் பேரிடியாக அமைகிறது. அமெரிக்க உணவு, விவசாயப் பொருள்களுக்கு வரியல்லாத பிற தடைகள் நீக்கப்படும் என்றும் தெரிகிறது. அமெரிக்க விவசாயிகள் அதிக மானியத்துடன் சாகுபடி செய்து பெரியஅளவில் ஏற்றுமதி செய்யும்போது இந்திய விவசாயிகளால் அவா்களுடன் போட்டியிட முடியாது.
நமக்கான கொள்கைகளை அமெரிக்கா வகுக்க அனுமதிக்கக் கூடாது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த அமெரிக்கா நமக்கு உத்தரவிடுகிறது. மத்திய பாஜக அரசு இவ்வாறு சரணடைவது பேரவமானம் என்று கூறப்பட்டுள்ளது.