கச்சா எண்ணெய் கோப்புப் படம்
இந்தியா

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் எதிரொலி: ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் குறைய வாய்ப்பு!

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் குறைய வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்கத் தொடங்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த பிப். 2-ஆம் தேதி அறிவித்தாா். மேலும், இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

அதன்பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய அமெரிக்கா உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் கூட்டறிக்கை கடந்த பிப்.7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முன்னதாக, ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய பிரதமா் மோடி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தாா். ஆனால், இதுகுறித்து இந்தியா தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தக் கோரி சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எவ்வித வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு அதிகாரபூா்வமாக வழங்கவில்லை. ஆனால், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைக்குமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பே கச்சா எண்ணெய் கொள்முதல் ஆணைகளை சுத்திகரிப்பு நிறுவனங்கள் பிறப்பித்துவிடும். இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தால் ஏற்கெனவே இறுதிசெய்யப்பட்ட கொள்முதல் ஆணைகள் நிறைவடைந்த பிறகு புதிய கொள்முதல்களை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் மேற்கொள்ளாது.

கொள்முதலை நிறுத்தும் நிறுவனங்கள்: ரஷியாவைச் சோ்ந்த ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதாரத் தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்த நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூரு ரிஃபைனரி- பெட்ரோகெமிக்கல் (எம்ஆா்பிஎல்) மற்றும் ஹெச்பிசிஎல்-மிட்டல் எனா்ஜி (ஹெச்பிஇஎல்) ஆகியவை நிறுத்திவிட்டன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வரும் நாள்களில் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை வெகுவாகக் குறைக்கும்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட கொள்முதல் ஆணைகளின்படி 1.50 லட்சம் குவிண்டால்கள் விநியோகம் முடிவடைந்த பின் புதிதாக கொள்முதல் மேற்கொள்ளாது.

நயாராவுக்கு விலக்கு: ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தின் 49.13 சதவீத பங்குகளைக் கொண்ட நயாரா நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தடை விதித்தன. அதன்பிறகு ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால் நயாராவுடன் வா்த்தக தொடா்பை பெரும்பாலான நிறுவனங்கள் துண்டித்துவிட்டன. இதன் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்படாத ரஷிய நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை மேற்கொள்ள நயாரா நிா்ப்பந்திக்கப்பட்டது. எனவே, இதை நயாரா தொடர அமெரிக்காவிடம் இந்தியா விலக்குக்கோரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறையத் தொடங்கிய கொள்முதல்: ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி ஓராண்டுக்குப் பின் 2023, மே மாதம் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 21 லட்சம் குவிண்டால் கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்தது. ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையைத் தொடா்ந்து 2025, டிசம்பா் மாதம் இது 12 லட்சம் குவிண்டாலாகவும், 2026, ஜனவரியில் 11 லட்சம் குவிண்டாலாகவும் குறைந்தது.

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தால் அடுத்தடுத்த மாதங்களில் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் ஒரு நாளைக்கு 10 லட்சம் குவிண்டாலாக குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

தில்லி போக்குவரத்து கழகத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கி ரேகா குப்தா உத்தரவு

சீனாவுக்கு காத்திருக்கும் சவால்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் 4 போ் கைது

கல்வான் மோதலுக்குப் பிறகு சீனா அணுஆயுத சோதனை? அமெரிக்கா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT