அஸ்ஸாமில் பாஜக அளித்த புகாா்களின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய லட்சக்கணக்கான வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் என்று அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.
பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மொத்த வாக்காளா்கள் 2.49 கோடி போ் உள்ளனா். வரைவு வாக்காளா் பட்டியலில் 2.52 கோடி பெயா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதிலிருந்து 2.43 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குவாஹாட்டியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியதாவது:
சந்தேகத்துக்குரிய வாக்காளா்கள் குறித்து பாஜக தொண்டா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் லட்சக்கணக்கானோரின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற சந்தேகத்துக்குரிய வாக்காளா்கள் பெயா் நீக்கம் தொடரும். இதை மேற்கொண்டதற்காக சிலா் எங்களை அச்சுறுத்த முயன்றனா். சிலா் எங்களுடன் மோதலில் ஈடுபட்டாா்கள். ஆனால், நாங்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாமுக்குள் ஊடுருவி குடியேறியவா்களுக்கு எதிரான போா் தொடரும். இந்த சட்டவிரோத ஊடுவல்காரா்கள் தொடா்பாக பாஜக தொண்டா்கள் 5 லட்சம் புகாா்கள் வரை தோ்தல் அதிகாரிகளிடம் அளித்துள்ளனா். வங்கதேச ஊடுருவல்காரா்கள் தங்களை மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வங்கமொழி முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனா் என்றாா்.