முகப்பு
இந்தியா

அருணாசல் முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரிய மனு - உச்சநீதிமன்றம் தீா்ப்பு ஒத்திவைப்பு

அருணாசல் முதல்வரின் குடும்ப நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி ஒப்பந்தங்கள்: சிபிஐ விசாரணை கோரி மனு - தீா்ப்பு ஒத்திவைப்பு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:06 PM
உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்.
பகிர்:

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு சாா்பாக வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிட்டதாவது: கடந்த 10 ஆண்டுகளில் முதல்வா் பெமா காண்டு அல்லது அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு நேரடியாகச் சொந்தமான 4 நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், பணி மேற்கொள்வதற்கான உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஊழல் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இந்த வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Advertisement

வழக்குடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் எழுத்துபூா்வ வாதங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments